தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கரோனாதடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
முகாமை தொடங்கி வைத்து, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்கூறியதாவது:
மக்களுடன் அதிகம் தொடர்பு உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. விமான நிலையத்தில் பணிபுரியும் 210 பேருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதுபோல ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்படும். நமது மாவட்டத்தில் உள்ள 18,000 மீனவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் தடுப்பூசிபோட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பால் பாக்கெட் போடுவோர், செய்தித்தாள் போடும் பணியாளர்கள் ஆகியோருக்கும் தடுப்பூசி போடுவதால் 3-வது அலை வந்தாலும் அதிக பரவல் இன்றி தடுக்கப்படும். நமது மாவட்டத்தில் 18 வயதுக்கு மேல் 14 லட்சம் பேர் உள்ளனர். இதில், 3.35 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார் ஆட்சியர்.
மாநகராட்சி ஆணையர் சாரு,வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா, மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி, வட்டாட்சியர் ஜஸ்டின், பிஎம்சி பள்ளி முதல்வர் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆட்டோஓட்டுநர்கள் பலர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
நாகர்கோவில்
குழித்துறை பரங்குன்றில் ஜேம்ஸ் உயர்நிலைப் பள்ளியில் முழுவளர்ச்சி சமூக சேவை மையத்துடன் இணைந்து தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் மாற்றுத் திறனாளிகள் 220 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், வெட்டுமணி ஆரம்ப சுகாதார நல அலுவலர் குமார், கிட்ஸ் செயல் இயக்குநர் ஜாண் மைக்கேல்ராஜ் கலந்துகொண்டனர்.