சேலத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பயணச்சீட்டை பிஹார் இளைஞர்களிடம் வழங்கிக் கட்டணம் வசூலித்த அரசுப் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணிக்க அரசு சலுகை அளித்துள்ளது. பயணத்தின்போது பெண்களுக்கு கட்டணமில்லா பயணச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்தில் பயணச் சீட்டு ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது, பேருந்தில் வந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 21 இளைஞர்களுக்கு கட்டணம் இல்லா பயணச்சீட்டை நடத்துநர் வழங்கி தலா ரூ.6 வசூலித்தது தெரிந்தது.
இதையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி நடத்துநர் நவீன்குமாரை பணியிடை நீக்கம் செய்தனர்.