Regional02

தனியார் நூற்பாலையில் தீ விபத்து :

செய்திப்பிரிவு

பல்லடம் அருகே கேத்தனூரைச் சேர்ந்தவர் முருகேசன் (56 ). இவருக்கு சொந்தமான பஞ்சு நூற்பாலையில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள குடோனில் விற்பனைக்காக இரண்டாம் தர கழிவு பஞ்சு மூட்டைகள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. நள்ளிரவில் தொழிலாளர்கள் சிலர் பணியில் இருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

நூற்பாலையில் உள்ள தீயணைப்பானைக் கொண்டு அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் பஞ்சு மூட்டைகளுக்கும் தீ பரவியது. பல்லடம் தீயணைப்புத் துறையினர் சென்று, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும், பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, அங்கிருந்த கழிவுப் பஞ்சு மூட்டைகள் அகற்றப்பட்டன. இதில், பல லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமாகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT