மறைந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமியின் அஸ்தி இன்று செங்கல்பட்டில் உள்ள புனித ஜோசப் ஆலயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த சமூகஆர்வலரான ஸ்டேன் சுவாமி, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பழங்குடி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக குரல் கொடுத்து வந்தவர். 2018-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகானில் நடந்த கலவரத்தில் இவருக்கு தொடர்புடையதாக கூறப்பட்டு, உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் அவர் கடந்த 5-ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டில் உள்ள புனித ஜோசப் ஆலயத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதற்காக அவரின் அஸ்தி இன்று காலை 11 மணி முதல்மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இதில் பங்குத்தந்தை மைகேல் ராஜ் தலைமையில் செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதி நாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.