மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி ராஜலெட்சுமி (45). இவர்களுக்கு அனிதா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
மகளை அதே பகுதியைச் சேர்ந்த அபிமன்யு (32) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.
ராஜலெட்சுமி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவருடன் வேலை பார்க்கும் திருச்சியைச் சேர்ந்த அன்பழகன் (30) என்பவருடன் ராஜலெட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு ராஜலெட்சுமி யுடன் வீட்டில் அன்பழகன் இருந்துள்ளார். இதை பார்த்த அபிமன்யு இருவரையும் கண்டித்ததால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ராஜலெட்சுமியும், அன்பழகனும் அரிவாளால் வெட்டப்பட்டனர். சம்பவ இடத்திலேயே ராஜலெட்சுமி உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த அன்பழகன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி அபிமன்யுவை கைது செய்தனர்.