திருப்பூரில் கைது செய்யப்பட்ட வங்கதேச நாட்டை சேர்ந்தவர், சென்னை சைதாபேட்டை சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்தவர் எனக் கூறி, திருப்பூர் பாண்டியன் நகரில் 2 ஆண்டுகளாக தையல் தொழிலாளியாக பணியாற்றி வந்த முகமது சொஹல் ராணா (28) என்பவரை திருமுருகன்பூண்டி போலீஸார் நேற்று முன் தினம் பிடித்து விசாரித்ததில், அவர் வங்கதேச நாட்டை சேர்ந்தவர் என உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் அளித்திருந்த மேற்குவங்க மாநிலத்தின் முகவரி போலியானது என தெரியவந்தது. இந்த நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்ததால், முகமது சொஹல் ராணா மீது வழக்கு பதிந்து திருமுருகன்பூண்டி போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சென்னை சைதாபேட்டை சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.