Regional01

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே சாலை விரிவாக்கம் செய்ய அமைச்சர் ஆய்வு :

செய்திப்பிரிவு

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே சாலை விரிவாக்கப் பணிகள், காவல் நிலைய இடமாற்றம் தொடர்பாக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதன்ஒரு பகுதி அரசு தலைமை மருத்துவமனையை ஒட்டி அமைந்து உள்ளதால் அப்பாதை மிக குறுகிய நிலையில் உள்ளது.

இதன்காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.

எனவே, அந்தப் பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டுமென தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாலையை விரிவுபடுத்துவது தொடர்பாக அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். சாலையை அகலப்படுத்தும் போது மருத்துவமனை வளாகம் பாதிக்கப்படும் என்பதால் அதற்கான மாற்று வழிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல்நிலையத்தை மாற்றி அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT