திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு கார் பருவத்தில் இதுவரை10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள தாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. விவசாயிகள் நீர் நிர்வாகத்தை தவறாமல் கடைபிடித்து அதிக மகசூல் பெறுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பாண்டு ஜூன் முதல் வாரத்தி லேயே பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து கார் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங் களிலும் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
நேற்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையிலிருந்து 1,404.75 கனஅடி, மணிமுத்தாறு அணையிலிருந்து 250 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறந்து விடப்பட்டது. கார் சாகுபடி செய்துள்ள விவசாயி கள் நீர் நிர்வாக த்தை தவறாமல் கடைபிடித்தால் அதிக மகசூல் பெறமுடியும் என்று வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் கூறியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் நடப்பு கார் பருவத்தில் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஎஸ்டி 16, டிபிஎஸ் 5 ஆகிய குறுகியகால ரகங்களே பயிரிடப்பட்டுள்ளது. தற்போது சாகுபடி செய்யப்பட்டு ள்ள நெற்பயிர் வளரும் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ளது. நெற்பயிருக்கு மற்ற பயிர்களைவிட தண்ணீர் அதிகம் தேவைப்படும்.
நெற்பயிரில் வெவ்வேறு வளர்ச்சி பருவங்களுக்கு தேவையான தண்ணீரின் அளவை தெரிந்து பாசனம் செய்தால் விளைச்சல் பெருகுவதுடன் 15 முதல் 20 சதவீதம் தண்ணீரையும் சேமிக்கலாம்.
நெற்பயிரின் வளர்ச்சி பருவம் 7 முதல் 35 நாட்கள், தூர்கட்டும் பருவம் 40 முதல் 45 நாட்கள். இப்பருவங்களில் 2.5 செ.மீ. முதல் 5 செ.மீ. அளவுக்கு நீரை நிறுத்த வேண்டும். இதனால் அதிக வேர் பிடித்து விரைவாகவும், அதிகமாகவும், தூர் கட்ட உதவுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக தண்ணீர் கட்டினால் வேர்கள் மற்றும் தூர்களின் எண்ணிக்கை குறைந்துவிடும்.
நடவு செய்த 45-50 நாட்களில் நெற்பயிரில் பூக்கள் வெளிவரத் தொடங்கும். இப்பருவத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருந்தால் நெல்லில் அதிக பதர் உண்டாகி விளைச்சலை பாதிக்கும். உரமிடும்போது நிலத்தில் 5 செ.மீ.-க்கு அதிகமாக நீர் இருந்தால் வேரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மண்ணில் உள்ள சத்துகளை உறிஞ்ச முடியாமல் போய்விடும். மேலும் தழைச்சத்தை வீணடித்து நெற்பயிருக்கு கிடைக்காமல் செய்துவிடும். எனவே, அதிகப்படியான தண்ணீரை வடித்துவிட்டு, உரமிட்டு பின் இருநாட்கள் கழித்து நீர்கட்டினால் உரத்தின் பயன் முழுமையாக கிடைக்கும்.
விவசாயிகள் நீர் நிர்வாகத்தை தவறாமல் கடைபிடித்து அதிக மகசூல் பெறலாம் என்று தெரி வித்தார்.