ராணிப்பேட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கடந்த 14-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், நெமிலி வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்டோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். அப்போது, நெமிலி அடுத்த காட்டுப்பாக்கம் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியர் புவியரசன் மது போதையில் அனைவரின் முன்னிலையிலும் திடீரென கீழே விழுந்து ‘எனக்கு துணையாக இருந்த சங்கத்துக்கு நன்றி’ என்று தெரிவித்தார். அவரது இந்த செயலால் அங்கிருந்த ஆசிரியர்கள் பலர் தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் தலைமை ஆசிரியர் புவியரசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் கூறும்போது, ‘‘பொது இடங்களில் அரசு ஊழியர் ஒருவர் இப்படி நடந்துகொள்வது ஒழுங்கீனமானது என்ற அடிப்படையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்’’ என்றார்.