கரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்ட ஈரோடு -சேலம், திருச்சி - பாலக்காடு உள்ளிட்ட பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சருக்கு, ஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு துணைத்தலைவர் கே.என்.பாஷா அனுப்பியுள்ள மனு விவரம்:
கரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக, சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ ரயில்கள் மற்றும் கரூர் - திருச்சி இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ஈரோடு - கோவை, கோவை - சேலம், கோவை - நாகர்கோயில், ஈரோடு - திருச்சி, திருச்சி - பாலக்காடு வரையிலான பயணிகள் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஈரோடு ரயில்நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில், நான்கு நடைமேடைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இதனால், ரயில்நிலையத்தில் நுழைய முடியாமல், ஈரோடு புறநகர் பகுதியில் ரயில்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, ஐந்தாவது நடைமேடையை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் செயல்பட்டது போல், முன்பதிவு இல்லா பெட்டிகளை இணைத்து ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும்.
கரோனா பரவலின்போது, நடைமேடைகளில் கூட்டத்தைக் குறைக்க நடைமேடைக்கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது தொற்று குறைந்துள்ள நிலையில், நடைமேடைக்கட்டணத்தை ரூ.10 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.