சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான ஊன்றுகோல் என்ற பணிக்குழு உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தை களுக்கு நிதியுதவி உட்பட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட அளவிலான ‘ஊன்றுகோல்’ என்ற பணிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆட்சியர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உதவி வேண்டுவோர் இந்த மையத்தை வாட்ஸ்-அப் எண்.93857-45857 மற்றும் மின்னஞ்சல் முகவரியில் postcovid19helpteamslm@gmail.com விண்ணப்பிக்கலாம். விண்ணப் பங்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் துரித நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவிகள் வேண்டி 521 விண்ணப்பங்கள் வரப்பெற்று 184 விண்ணப்பங்கள் அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 337 விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கல்வி பயில்வதற்கு உதவி வேண்டி 209 குழந்தைகளின் விவரங்கள் பெறப்பட்டு அவற்றில் 161 குழந்தைகள் பள்ளி பயிலும் நிலையிலும், 48 குழந்தைகள் கல்லூரி மற்றும் அங்கன்வாடிகளில் பயிலும் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளாக உள்ளனர். குழந்தைகள் அவர்கள் படிக்கும் பள்ளியிலோ அல்லது விரும்பும் பள்ளியிலோ சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளை பாதுகாப்பது, அவர்களுக்குரிய உரிமைகளை பெற்றுக் கொடுப்பது, கல்வி, பொருளாதாரம், எதிர்கால வாழ்க்கை தர மேம்பாடு ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுப்பதற்கு அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.