Regional01

தசை நார் சிதைவால் பாதித்த சிறுமிக்கு மருந்து வாங்க - ரூ.6 கோடி இறக்குமதி வரியை ரத்து செய்த மத்திய அரசு : சிறுமியின் தந்தை தகவல்

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்தப்பட வேண்டிய ஊசி மருந்துக்கு இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக, சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமி மித்ராவின் தந்தை சதீஸ்குமார் கூறியதாவது:

தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட எனது மகள் மித்ராவின் (2) சிகிச்சைக்காக, ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் ஊசி மருந்து தேவைப்பட்டது.

இதன் விலை ரூ.16 கோடி ஆகும். இதை இந்தியாவில் இறக்குமதி செய்ய ரூ.6 கோடி வரி செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

எனது மகளின் சிகிச்சைக்காக பொதுமக்கள் கொடுத்த நன்கொடை மூலம் ரூ.16 கோடி கிடைத்தது. இந்நிலையில் இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தோம்.

இதையடுத்து, மத்திய அரசு இறக்குமதி வரி ரூ.6 கோடியை ரத்து செய்துள்ளது.

இதற்கான கடிதம் ஈ மெயில் மூலம் எனக்கு அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாங்கள் பெங்களூரு மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவமனை மூலமாக மருந்து ஆர்டர் செய்யப்படும். ஓரிரு நாட்களில் மருந்து கிடைத்ததும் மித்ராவுக்கு அந்த மருந்து செலுத்தப்படும். எங்கள் மகள் வாழ உதவி செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT