Regional02

செல்போன் டவரில் இருந்து விழுந்த இளைஞர் உயிரிழப்பு : இழப்பீடு கோரி உறவினர்கள் போராட்டம்

செய்திப்பிரிவு

சேலம் அருகே தனியார் செல்போன் டவரில் இருந்து விழந்து உயிரிழந்த இளைஞரின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்துபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் செல்போன் டவரில் சிக்னல்கள் சரியாக உள்ளதா என்பதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் வேம்படிதளம் அருகே பஞ்சாயத்து அலுவலகம் பின்புறம் உள்ள செல்போன் டவரில் சிக்னல் சரியாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார்.

அப்போது, நிலை தடுமாறிய தினேஷ்குமார் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த தினேஷ்குமாருக்கு திருமணாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. உறவினர்கள் தினேஷ்குமார் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று உறவினர்கள் வலியுறுத்தினர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.

SCROLL FOR NEXT