திருவாரூர் அருகே புதுப்பத்தூரில், கிராமத்துக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. இந்தக் குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு, அதை விற்று கிடைக்கும் தொகையை கிராமத்தின் பொதுச் செலவுக்கு மக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்தக் குளத்தை கடந்த ஆண்டு முதல் தனக்கு சொந்தமானது எனக் கூறி, திருவாரூர் ஒன்றியத்தின் 11-வது வார்டு கவுன்சிலரும், ஒன்றிய அதிமுக பொருளாளருமான நடராஜன்(45) என்பவர் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், புதுப்பத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்த வீரையன்(46) என்பவர் நேற்று அந்தக் குளத்தில் இறங்கி மீன்பிடித்தார். அப்போது, அங்கு வந்து தகராறில் ஈடுபட்ட நடராஜன், வீரையனை அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த வீரையனை அருகிலிருந்தவர்கள் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த வீரையனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், நடராஜனின் வீட்டுக்குச் சென்று, வீடு மற்றும் வாகனங்களை கற்கள் மற்றும் கட்டைகளால் தாக்கினர். தகவலறிந்து அங்கு சென்ற திருவாரூர் தாலுகா போலீஸார், இந்த தாக்குதலைத் தடுக்க முயன்றபோது, போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர், அதிகளவிலான போலீஸார் வரவழைக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து, திருவாரூர் எஸ்.பி சீனிவாசன் அங்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர், கொலை முயற்சி, தகாத வார்த்தைகளில் பேசுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்து, நடராஜனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.