திருநெல்வேலி அருகே தாழையூத்தில் கட்டிட ஒப்பந்ததாரர் நா. கண்ணன் (35) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை டிரோன் மூலம் தேடும் பணியை போலீஸார் மேற்கொண்டனர்.
தாழையூத்து பண்டாரகுளம் அருகே கடந்த 12-ம் தேதி 6 பேர் கும்பலால் கண்ணன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதி முத்துமனோ கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் எதிரொலியாக இச் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடையதாக நல்லதுரை (22), சங்கிலி பூதத்தான் (20), குரு சச்சின் (22), அம்மு வெங்கடேஷ் (22) ஆகிய 4 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 12 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இவர்களில் சிலர் களக்காடு மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கு டிரோன் மூலம் தேடும் பணியை தனிப்படை போலீஸார் மேற்கொண்டனர். அங்கு சந்தேகப்படும் வகையில் திரிந்த நபர்களையும் பிடித்து விசாரித்தனர்.