தூத்துக்குடியில் ரூ.5 கோடி மதிப்பிலான ஹசீஷ் போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடிக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பிரிவின் உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் தூத்துக்குடியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது வண்ணார் தெருவில் வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி சோதனை செய்தனர். அதில் சுமார் 5 கிலோ ஹசீஷ் எனப்படும் கஞ்சா எண்ணெய் கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் கஞ்சா எண்ணெயை கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து தூத்துக்குடிக்கு அவர் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த இளைஞரிடம் மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.