ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த ஊராட்சிக்கோட்டை வரதநல்லூர் ஊராட்சியில், அம்ரூத் திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சிக்கான தனிக்குடிநீர் திட்டம் மற்றும் பவானி நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சி பகுதி மக்களுக்கு 69.28 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க திட்டம் வடிவமைக்கப்பட்டு, தற்போது நாளொன்றுக்கு 34 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஈரோடு மாநகராட்சியில் 2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 5.35 லட்சம் மக்கள் தொகை உள்ள நிலையில், நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 64 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாநகராட்சிக்கு தனி குடிநீர் திட்டமாக, காவிரி ஆற்றில் ஊராட்சிக்கோட்டை அருகே அமைந்துள்ள மின்வாரிய கதவணையிலிருந்து குடிநீர் எடுக்க திட்டமிடப்பட்டது. இதற்கென ரூ.484.45 கோடியில் ஊராட்சிக்கோட்டை தனிக்குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், 1.30 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது. தற்போது இத்திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது, என்றார்.ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், குடிநீர்வடிகால் வாரிய உதவி பொறியாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.