கோவையில் இருந்து சென்னை புறப்பட்ட பாஜக மாநில தலைவர் அண்ணா மலைக்கு வரவேற்பு அளித்த அக்கட்சியின் மகளிர் அணியினர். படம்:ஜெ.மனோகரன். 
TNadu

தமிழகத்துக்கு பாஜக தேவைப்படுகிறது : மாநில தலைவர் அண்ணாமலை கருத்து

செய்திப்பிரிவு

இன்றைக்கு தமிழகத்துக்கு பாஜக தேவைப்படுகிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அவர், நாளை சென்னையிலுள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பதவியேற்க உள்ளார். இதற்காக, கோவையில் இருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக சென்னைக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதன்படி, கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் அண்ணாமலை நேற்று காலை வழிபாடு நடத்திவிட்டு பயணத்தை தொடங்கினார்.

அப்போது அவர் கூறியதாவது: சென்னை செல்லும் வழியில் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்க உள்ளேன். பாஜக வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்படுவேன். அனுபவமும் இளமையும் சேர்ந்த கூட்டு முயற்சியால் பாஜக மிகப்பெரிய கட்சியாக தமிழகத்தில் வளரும்.

மற்ற கட்சிகளில் ‘ஒரு தலைவர், ஒரு குடும்பம்’ என இருப்பார்கள். ஆனால், பாஜக தனி மனித கட்சி கிடையாது என்றார்.

இதைத் தொடர்ந்து திருப்பூரில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: ஓசூர், கன்னியாகுமரி, கோவை என பல்வேறு இடங்களில் தங்களது உயிரைக் கொடுத்து பாஜகவினர் கட்சியை வளர்த்துள்ளனர். இத்தனை ஆண்டு காலமாக பாஜகவுக்கு தமிழகம் தேவைப்பட்டது. இன்றைக்கு தமிழகத்துக்கு பாஜக தேவைப்படுகிறது. ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் தமிழகத்தில் 13 ஆயிரம் கிராமங்களுக்கு பாஜகவை எடுத்துச் செல்ல வேண்டும். தமிழகத்தின் வருங்காலம் பாஜகவின் காலம்தான் என்றார்.

SCROLL FOR NEXT