நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஜிகா வைரஸ் பரவலைத் தடுக்க நோய் தடுப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக 50 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையர் பி.பொன்னம்பலம் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவலைத் தடுக்க அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நகராட்சி ஆணையர் பி. பொன்னம்பலம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இவற்றில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக 50 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவருக்கும் தலா 100 வீடுகள் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணியாளர்கள் குடியிருப்புகளுக்குச் சென்று தண்ணீர் தொட்டிகளில் ஏடிஎஸ் கொசுக்களை அழிக்கும் அபேட் மருந்து தெளிக்கும் பணியைமேற்கொள்வர். பொதுமக்களும் தங்களது குடியிருப்புகளில் பயன்படுத்தாத பொருட்களில் மழைநீர் தேங்கியிருப்பதை அகற்றிக் கொள்ள வேண்டும். மேலும், அபேட் மருந்து தெளிக்க வரும் பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.