விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாற்றப்பட்டதாக கூறப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோருக்கு நேற்று மரபணு பரிசோதனை செய்யப்பட்டது.
திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூரைச் சேர்ந்தவர் சங்கிலி (38) கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமிக்கு(26) கடந்த 8-ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அப்போது அறுவை சிகிச்சை அறைக்கு வெளியே இருந்த அவரது தாய் ராமாயி(55) என்பவரிடம் செவிலியர் ஆண் குழந்தை பிறந்தது எனக் கூறியதாகக் கூறப்படுகிறது. பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்த சங்கிலியிடம் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ராமாயி கூறினார். ஆனால், சற்று நேரத்தில் வந்த செவிலியர்கள் சுப்புலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும், அதன் விரல்கள் ஒட்டிய நிலையிலும் அன்னப்பிளவு ஏற்பட்டு பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் தங்கள் குழந்தை மாற்றப்பட்டுள்ளதாகவும் சங்கிலி புகார் தெரிவித்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் எஸ்பி உத்தரவில் நேற்று காலை போலீஸார் முன்னிலையில் குழந்தைக்கும் சங்கிலி மற்றும் சுப்புலட்சுமிக்கும் மரபணு பரிசோதனை செய்ய தடய அறிவியல் துறையிலிருந்து மரபணு பரிசோதனைக்கான எப்.டி.ஏ. கிட் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து, மரபணு பரி சோதனைக்காக அவர்களின் ரத்த மாதிரி மதுரை மண்டல தடய அறிவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.