BackPg

நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவு - நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா நியமனம் :

செய்திப்பிரிவு

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமர் கே.பி. சர்மா ஒளியின் பரிந்துரைப்படி கடந்த மே 22-ம் தேதி குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். புதிய தேர்தல் நவம்பர் மாதம்நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார்.

இதை எதிர்த்து நேபாள காங்கிரஸ் கட்சி உட்பட 30 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நாடாளுமன்றத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்றும் பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பாவை நியமிக்க வேண்டும் என்றும் கோரினர்.

இவ்வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ஷெர் பகதூரை பிரதமராக நியமித்து உத்தரவிட்டனர். 2 நாட்களுக்குள் அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க வேண்டும் என்றும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் அமைக்க வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT