Regional01

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் : 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போட்ட சீக்கம்பட்டு, தேவியகரம் ஊராட்சிகள் :

செய்திப்பிரிவு

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சீக்கம்பட்டு ஊராட்சி மற்றும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் தேவியகரம் ஊராட்சியில் அரசால் அறிவிக்கப்பட்ட தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

இந்த இரு ஊராட்சிகளிலும் கடந்த மே 15-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. தொடக்கத்தில் தயக்கத்தோடு கிராம மக்கள் இருந்தனர். ஊராட்சியின் சார்பாகவும், சுகாதாரத் துறையின் சார்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனடிப்படையில், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

மேலும், தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த இரு ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலைப் பணிகளை மேற்கொள்வோர், தடுப்பூசி போட்டால் அடுத்த இரு நாட்களுக்கு உடல் சோர்வு காரணமாக ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, விடுபட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு இருந்த பயத்தை போக்கும் வகையில் மக்களுக்கு எடுத்துக்கூறி அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக எடுத்துச் சென்றதால், சிக்கம்பட்டு, தேவியகரம் ஆகிய இரு ஊராட்சிகளிலும் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடைந்துள்ளதாக அந்த ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT