பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேரும் ஆர்வம் எந்த அளவுக்கு மாணவர்கள் மத்தியில் இருக்கிறதோ, அதே ஆர்வம் சட்டப்படிப்பு மீதும் உள்ளது. மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்று சட்டப் படிப்பும் தொழில்கல்வி படிப்புதான். சமூக அந்தஸ்து, நல்ல வருமானம், சமுதாயத்துக்கு பல்வேறு நன் மைகள் செய்யக்கூடிய வாய்ப்பு போன்ற காரணங்களால் மாணவ-மாணவிகள் சட்டப் படிப்பில் சேர ஆசைப்படுகிறார்கள்.
சட்டப் படிப்பு ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கால சட்டப் படிப்பாகவும் (BA LLB, Bcom LLB, BBA LLB), 3 ஆண்டு கால படிப்பாகவும் (LLB) வழங்கப்படுகிறது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் நேரடியாக ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்பிலும், பட்டதாரிகள் 3 ஆண்டு சட்டப் படிப்பிலும் சேரலாம்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு, தருமபுரி, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகளிலும், சேலம் மற்றும் திண்டிவனத்தில் தனியார் சட்டக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக திகழும் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் (School of Excellence in Law) 5 ஆண்டு கால ஆனர்ஸ் சட்டப் படிப்புகளும் (BA LLB, BBA LLB, Bcom LLB, BCA LLB) 3 ஆண்டு கால ஆனர்ஸ் சட்டப்படிப்பும் வழங்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு எப்படி?
இளங்கலை சட்டப் படிப்பை முடிப்பவர்கள் பார் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு உயர்நீதிமன்றத்திலும், கீழ்நிலை நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர் பணியைத் தொடரலாம். தனியார் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர் ஆகலாம். டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி மாஜிஸ்திரேட், சிவில் நீதிபதி, மாவட்ட நீதிபதி, தொழிலாளர் உதவி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி (சட்டம்) போன்ற பதவிகளில் சேரலாம். மேலும், அரசு, தனியார் வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பு அதிகாரி (சட்டம்) போன்ற பணிகளில் சேர முடியும். சமீப காலமாக பொதுத்துறை வங்களில் சட்ட அலுவலர் பதவிகள் அதிக எண்ணிக்கையில் நிரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு சட்டப் படிப்பு பெரிதும் உதவிகரமாக இருக்கும். அந்த வகையில், சட்ட பட்டதாரிகள் சிவில் சர்வீஸ் தேர்வு, மத்திய தொழிலாளர் உதவி ஆணையர், தொழிலாளர் வருங்காலவைப்புநிதி (இபிஎப்) உதவி ஆணையர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை எழுதி மத்திய அரசில் பெரிய பதவிகளுக்குச் செல்லலாம்.
தற்போது கார்ப்பரேட் நிறுவ னங்களில் சட்ட ஆலோசகர்கள் அதிகம் பணியமர்த்தப்பட்டு வரு கிறார்கள்.
மேற்படிப்பை பொருத்தவரையில், வரி, வணிகம், அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் நலன், அரசியல் அமைப்பு சட்டம், மனித உரிமைகள்,சுற்றுச்சூழல், நீதி நிர்வாகம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் முதுகலை சட்டப் படிப்பு (LLM) படிக்கலாம். முதுகலை சட்டப் படிப்பை முடிப்பவர்கள் நெட், ஸ்லெட் ஆகிய தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் தேர்வுவாரியம் நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலமாக அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேரலாம்.