Regional01

சேலத்தில் குறைந்து வரும் கரோனா பாதிப்பு - சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,086 ஆக குறைவு :

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,086 ஆக குறைந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த மே மாத பிற்பகுதியில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்தது. நாளொன்றுக்கு ஆயிரத்து 500 பேர் வரை பாதிக்கப்பட்டனர். கடந்த மே 26-ம் தேதி மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகவும் இதில், 24 ஆயிரத்து 950 பேர் சுகாதாரத்துறையினரின் கண்காணிப்பில் இருந்தனர்.

தற்போது, கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது தொடங்கி தற்போது வரை மாவட்டத்தில் மொத்தம் 91 ஆயிரத்து 200 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில், 87 ஆயிரத்து 272 பேர் குணமடைந்துள்ளனர். 1,512 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 12 லட்சத்து 49 ஆயிரத்து 851 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தற்போது, தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 200-க்கும் கீழ் குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 86 ஆக குறைந்துள்ளது. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 18 ஆக குறைந்துள்ளது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள 337 வீடுகளைச் சேர்ந்த 1,230 பேர் சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். இதனிடையே, கரோனா 3-வது அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT