கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது.
இதில், 36 பேர் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர். அப்போது, கடந்த வாரக் கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டு அதில் 21 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதில் பெரும்பாலான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. 4 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது என ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், தேசிய தகவலியல் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பாலகணேஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், ஆதிதிராவிடர் நல அலுவலர் சந்தியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மூதாட்டி தீக்குளிப்பு முயற்சி
கரூர் ஆட்சியர் அலுவலக வாகன நிறுத்துமிடத்தில் நேற்று நின்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் திடீரென பையில் இருந்து மண்ணெண்ணெயை எடுக்க முயன்றார். பெண் காவலர் ஒருவர் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தார். இதில், அவர் தோகைமலை அருகேயுள்ள பொருந்தலூரை சேர்ந்த மாரியாயி (65) என்பதும், அவருக்கு சொந்தமான வீடு மற்றும் நிலத்தை சிலர் அபகரிக்க முயல்வதாக தோகைமலை காவல் நிலையம், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி அவரை போலீஸார் அனுப்பி வைத்தனர்.