Regional04

பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினத்தில் - மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் சிறுவன் கொலை? : அதிகாரிகள் முன்னிலையில் எலும்புக் கூடு தோண்டியெடுப்பு :

செய்திப்பிரிவு

பட்டுக்கோட்டை அருகே மனவளர்ச்சி குன்றியோர் காப்பகத்தில் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில், காப்பகத்தில் நேற்று அதிகாரிகளின் முன்னிலையில் பொக்லைன் மூலம் தோண்டியபோது ஒரு எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியில், மனவளர்ச்சி குன்றியோர் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தை முகமது ஷேக் அப்துல்லா(52) என்பவர் நடத்தி வருகிறார். இந்த காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய சிறுவர், சிறுமிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காப்பகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 வயது சிறுவனை முகமது ஷேக் அப்துல்லா அடித்தபோது, அந்தச் சிறுவன் இறந்துவிட்டதாகவும், யாருக்கும் தெரியாமல் காப்பகத்திலேயே குழிதோண்டி சிறுவனின் உடலை புதைத்து விட்டதாகவும் முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு ஷேக் அப்துல்லாவின் மனைவி கலிமா பீவி சில மாதங்களுக்கு முன்பு புகார் அனுப்பினார்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், வட்டாட்சியர் தரணிகா, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நடராஜன் மற்றும் வருவாய்த் துறையினர் முன்னிலையில், காப்பகத்தில் கலிமா பீவி சுட்டிக்காட்டிய இடத்தில் நேற்று பொக்லைன் மூலம் தோண்டப்பட்டது. அப்போது, அங்கு ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அந்த எலும்புக்கூடு பரிசோதனைக்காக சுகாதாரத் துறை மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக, முகமது ஷேக் அப்துல்லா மற்றும் காப்பகத்தில் உள்ளவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT