திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பூஜாரிகள் பேரமைப்பினர். படம்: மு.லெட்சுமி அருண் 
Regional01

மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் : பூஜாரிகள் பேரமைப்பு கோரிக்கை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

வீரவநல்லூர் மக்கள் பொதுநல இயக்கத்தினர் அளித்துள்ள மனுவில், ‘வீரவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி புதிய கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பழைய கட்டிடம் வகுப்புகள் நடக்காமல் காலியாக உள்ளது. மாணவிகளுக்கு தனியாக 10-ம் வகுப்பு வரை பிரித்து, மகளிர் உயர்நிலைப் பள்ளி செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

நாங்குநேரி வட்டம் சுருளைகிராமத்தைச் சேர்ந்த பெருந்தலைவர் காமராஜர் சிலை பராமரிப்புக் குழு நிர்வாகி ஆறுமுகநயினார் அளித்துள்ள மனுவில், ‘சுருளை கிராமத்தில் காமராஜர் சிலை வைக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. சிலை பழுதடைந்து, வலது கை உடைந்த நிலையில் இருந்தது. ஊர் மக்கள் சார்பில் சிலையை பராமரிப்பு செய்து வைத்துள்ளோம். ஜூலை 15-ம் தேதி சிலை திறப்பு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

பூஜாரிகள் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஆறுமுகநம்பி அளித்துள்ள மனுவில், ‘பூஜாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். வயோதிகம், வறுமையில் வாடும் பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் பெறும் திட்டத்தை எளிமைப்படுத்தி, பயன்பெறும் பூஜாரிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் பெறும் பூஜாரிகள் இறக்க நேரிட்டால் அவரது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

அரசு கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்களுக்கு 2 சி மின்சார கட்டண விகிதத்தை ரத்து செய்ய வேண்டும். வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் வருவாய் இல்லாத கோயில்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும். சொந்த வீடு இல்லாத பூஜாரிகளுக்கு அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

மேலப்பாளையம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வீடற்ற மக்கள் வீட்டுமனைப் பட்டா, இலவச வீடு கட்டிக் கொடுக்கக் கோரி மனு அளித்தனர்.

SCROLL FOR NEXT