Regional02

3,335 மெட்ரிக் டன் யூரியா இருப்பு : அதிக விலைக்கு விற்க கூடாது என எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எஸ்.ஐ.முகைதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் கார் பருவ நெல் சாகுபடி மும்முரமாக நடைபெறுகிறது. விவசாயப் பணிக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. யூரியா 3,335 மெட்ரிக் டன், டிஏபி 925 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,056 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 1,534 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

2020-2021-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே, 2021-2022-ம் ஆண்டில் உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத்துறை அறிவித்துள்ளது. இதனை மீறி அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உர விற்பனையாளர்கள் அரசு சலுகை பெறும் மானிய உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் அட்டையின் அடிப்படையில் விற்பனை செய்தல் வேண்டும். விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது கண்டிப்பாக தங்கள் ஆதார் அட்டையை எடுத்து செல்ல வேண்டும். உர விற்பனையாளர்கள் நிறுவன வாரியாக உரங்களின் விலை மற்றும் இருப்பு விவரங்களை தகவல் பலகையில் தினசரி பதிவு செய்து பராமரித்தல் வேண்டும்.

மேலும் 'ஓ' படிவத்தில் பதிவு செய்து உர உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட உரங்களை மட்டுமே விற்பனை நிலையத்தில் இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும்.

மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும், விவசாயி அல்லாதவருக்கும், ஒரே நபருக்கு தேவைக்கு அதிகமாகவும், விற்பனை முனையக் கருவி பயன்படுத்தாமலும் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரம் உரிமம் ரத்து செய்யப்படும்.

SCROLL FOR NEXT