உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, சேலம் மாவட்டத்தில் 24-ம் தேதி வரை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருத்தடை சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நலம் சார்பில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஆட்சியர் கார்மேகம் தலைமை வகித்தார். இதையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசுகளை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், சிறப்பாக சேவை புரிந்த மகப்பேறு மருத்துவத் துறை தலைவர் மருத்துவர் சுபா மற்றும் சிறுநீரகவியல் துறை தலைவர் மருத்துவர் பெரியசாமி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி ஆட்சியர் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் தகுதியுள்ள தம்பதிகளின் விருப்பத்தின் அடிப்படையில் நிரந்தர கருத்தடை முறைகளான ஆண் கருத்தடை சிகிச்சைகள், பெண்களுக்கான குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தற்காலிக கருத்தடை முறைகளான கருத்தடை வளையம் பொருத்துதல், அந்தாரா கருத்தடை ஊசி போடுதல், சாயா மற்றும் கருத்தடை மாத்திரைகள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று (நேற்று) முதல் வரும் 24-ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள தம்பதிகள் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனிடையே, உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகன இயக்கத்தை ஆட்சியர் தொடங்கி வைத்து, விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மலர்விழி வள்ளல், துணை இயக்குநர் (குடும்ப நலம்) வளர்மதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.