மஞ்சள் பயிரிடும் காலம் என்பதால், ஈரோடு மாவட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் உடனடியாக பயிர்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி, மாவட்ட பாா்வையாளா் பாயிண்ட் மணி, மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகர், பொருளாளர் தீபராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் வைரவேல், மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ணகுமார், செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திர்மானங்கள் விவரம்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில், புதிய பயிர்கடன் மற்றும் நகைக்கடன் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மஞ்சள் பயிரிடும் காலம் என்பதால், பயிர்கடனை உடனடியாக வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டம் எலவநத்தத்தில் மத்திய அரசின் மஞ்சள் ஆராய்ச்சி மையத்தினை விரைந்துஅமைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அனுமன் நதியைத் தூர்வாரி, அதில் நீரைத் தேக்கி வைக்கும் வகையில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். அவல்பூந்துறை பேரூராட்சி சோளிபாளையம் குளத்தைத் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்த வேண்டும். சென்னிமலை முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். ஈரோட்டில் அம்பேத்கர் மற்றும் தீரன்சின்னமலை சிலை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.