மத்தூர் அருகே வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த சவுளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சாம்ராஜ் (52). இவரது மனைவி அருவி (49). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னையில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். சாம்ராஜ் சென்னையில் பானிபூரி விற்பனை செய்து வருகிறார்.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக அவ்வப்போது நகை வாங்கி சேமித்து வந்துள்ளனர். மேலும், பிளஸ் 2 முடித்து விட்டு உயர் கல்வியில் சேர இவர்களின் மூத்த மகள் காத்திருக்கிறார். இவரது படிப்பு செலவுக்காக ரூ.75 ஆயிரம் பணம் சேர்த்து வைத்திருந்தனர். பணம் மற்றும் நகையை சவுளூரில் உள்ள வீட்டில் வைத்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று சாம்ராஜ் வீட்டுக்கு வந்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் மற்றும் 30 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுதொடர்பான புகாரின்பேரில் மத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.