செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
சென்னை மண்டல செயலாளர் கோவை சத்யன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்கள் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், வி. சோமசுந்தரம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர்கள் காசிராஜன், சதீஷ், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கங்கை அமரன், அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் உள்ளிட்ட மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை சத்யன் பேசியதாவது: ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று கூறியவர்கள் இன்று தனதுதோல்வியை ஒப்புக் கொள்ளும் வகையில் உடற்பயிற்சி என்றபெயரில் சுமார் 40 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்கிறார்கள். பேரிடர் காலங்களில் என்ன நோய் என்று தெரியாத நிலையில் களத்தில் நின்று போராடியவர்கள் நமது கழக முன்னோடிகள். ஆனால், மக்களின் உணர்வுகளைத் தூண்டி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர்கள் திமுகவினர். நம்மிடம் உள்ள ஆயுதம் உண்மை. எதிரிகளிடம் உள்ள ஆயுதம் பொய். தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத அரசாகத்தான் தற்போதைய அரசு திகழ்கிறது.
உழைப்பே உயர்வு என்ற அடிப்படையில் சாமானியனும் அரியணையில் அமரும் ஒரே வரலாறு படைத்த இயக்கம் அதிமுக மட்டுமே. அனைவரும் களத்தில் நின்று பணியாற்றுங்கள். எதிர்க்கட்சியே இருக்காது என்றுகூறியவர்கள் மத்தியில் பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்திருக்கிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரும் செயல்படுங்கள் என்றார்.