Regional01

மாணவர்கள் உயர் கல்வி பெற - கல்விக்கடன் முனைப்பு திட்டம் தொடக்கம் : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்ட மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில கல்விக்கடன் பெறும் வகையில் கல்விக்கடன் முனைப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில கல்விக்கடன் பெற உதவும் வகையில், ‘கல்விக்கடன் முனைப்பு திட்டம் சேலம் 2021-22’ எனப் பெயரிடப்பட்டு செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்த வசதியாக சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் அறை எண் 211- ல் உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தின் தொலைபேசி எண் 0427-2414200 மற்றும் வாட்ஸ்அப் எண் 93427 52510. மைய தலைவராக ஆட்சியரும், ஒருங்கிணைப்பாளர்களாக திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் செயல் படுவர்.

இணை ஒருங்கிணைப்பாளராக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செயல்படுவார். மேலும், கல்வித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலர்கள் கொண்ட பணிக்குழு ஏற்படுத்தப்பட்டு இக்குழு செயல்படும்.

இதன் மின்னஞ்சல் முகவரி salemeducationalloan@gmail.com ஆகும். சேலம் மாவட்ட இணையதள முகவரியானhttps://salem.nic.in -ல் ‘மாணவர்களுக்கான கல்விக்கடன் முனைப்புத் திட்டம் சேலம் 2021-2022’ என்ற திட்டத்தின் கீழ் கல்விக்கடனுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் தனித்தனி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இத்திட்டத்தின் மூலம் கல்விக் கடன் பெற்று வழங்கக் கோருவதை சட்டப்பூர்வ உரிமையாக கருதக் கூடாது. கல்விக் கடன் விண்ணப்பத்தை வங்கிகள், மாணவர்களின் தகுதியின் அடிப்படையில் மட்டுமே பரிசீலித்து இறுதி முடிவு எடுக்கும். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாணவர்கள், உயர்கல்வி பயில தேவையான உதவிகளை இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT