எடப்பாடி அடுத்த தேவூர் மயிலம்பட்டியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி தனம். இவர்களது மகன்கள் சீனிவாசன் (38), சுதாகர் (34) இருவருக்கும் திருமணமான நிலையில், சீனிவாசன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
தனியார் பேருந்தில் நடத்துநராக பணிபுரியும் சுதாகர் குடும்பத்துடன் வேறு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சொத்து பிரச்சினையில் அண்ணன், தம்பிக்கு இடையில் முன் விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, தாய் தனம் தேவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார், சுதாகரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை மீண்டும் சகோதரர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது, சீனிவாசன் அரிவாளால் சுதாகரை தாக்கினார். இதில், அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து அங்கு சென்ற தேவூர் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீஸார், சுதாகரின் உடலை மீட்டு, விசாரணை நடத்தி சீனிவாசனை கைது செய்தனர்.