பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் 10 ஆண்டுகளாக திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளி மற்றும் பழநியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தேக்கிவைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை, தமிழக முதல்வரின் உத்தரவுப்படி செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:
2006-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன், தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டபடி பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதையடுத்து, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படவில்லை" என்றார்.
இதேபோல, திருப்பூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் தேக்கிவைக்கப்பட்டுள்ள வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டிகளை, கணக்கீடு செய்தும், பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ளதா என்பதுகுறித்தும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, தொடர்புடைய அலுவலர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவிட்டார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் சு.வினீத், கோட்டாட்சியர் ஜெகநாதன், வடக்கு வட்டாட்சியர் மற்றும்அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.