ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் சுங்கக்கட்டண வசூல் தொடர்பாக இன்று ஆர்டிஓ தலைமையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடக்கிறது.
ஈரோடு வ.உ.சி., திடலில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட கடைகளில் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்கும் குத்தகைதாரர், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாகக் கூறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் இணைந்து நேற்று முன்தினம் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக ஈரோடு ஆர்டிஓ பிரேமலதாவிடம் மனு அளிக்கப்பட்டது. அப்போது, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், வியாபாரிகள், குத்தகைதாரர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் இன்று (10-ம் தேதி) நடைபெறும் என்றும், அதில் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் ஆர்டிஓ தெரிவித்தார். இதையடுத்து நேற்று காய்கறி மார்க்கெட் வழக்கம்போல் இயங்கியது. ஆர்டிஓ அறிவிப்பின்படி, இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.