சேலம் பழைய சூரமங்கலத்தில் ரயில்வே துறை வைத்துள்ள பாதை தடுப்புகளை அகற்ற வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை தலைமையில் வந்த பொதுமக்கள் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
சேலம் பழைய சூரமங்கலம் அடுத்த போடிநாயக்கன்பட்டி, ஆண்டிபட்டி, போயர் தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் பல்வேறு பணிக்காக போடிநாயக்கன்பட்டி ஏரி வழியாக ரயில்வே பழைய ஐஓடபிள்யு அலுவலகம் வழியாக ரயில்வே கூட்ஷெட்டை ஒட்டியுள்ள சாலை வழியாக பழைய சூரமங்கலம் வந்து செல்வது வழக்கம்,
தற்போது, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையில் ரயில்வே துறை சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதி மக்கள் 3 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலையுள்ளது.
எனவே, மக்கள் நலன் கருதி ரயில்வே துறை வைத்துள்ள தடுப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனர்.