Regional03

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் - 5.40 லட்சம் கரோனா பரிசோதனை :

செய்திப்பிரிவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகம் இதுவரை 5.40 லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்து சாதனை படைத்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா 2-வது அலை படிப்படியாக குறைந்து, தற்போது தினசரிதொற்றின் அளவு 20, 30 எனஉள்ளது. இன்னும் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரவில்லை என்பதால் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மைக்ரோபயாலஜி ஆர்டிபிசிஆர் ஆய்வகம் மூலம்இதுவரை 5.40 லட்சம் கரோனாபரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா பரவல் அதிகமாக இருந்தபோது தினசரி 4 ஆயிரம் பரிசோதனைகள் வரைசெய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தின் மருத்துவர்கள், பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 2.50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தடுப்பூசி வர வர தொடர்ந்து போடப்பட்டு வருகிறது என்றார் ஆட்சியர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் குமரன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் தலைமையில், அலுவலர்கள், ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மக்கள் தொகை விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

SCROLL FOR NEXT