Regional03

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட - 360 கிலோ கஞ்சா பார்சல் பறிமுதல் :

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் இருந்து கனிம மண் ஏற்றிய லாரி கடந்த இரு தினங் களுக்கு முன்பாக விசாகப்பட்டிணம் துறைமுகத்துக்குச் சென்றுள்ளது. அங்கிருந்து கடலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு விருதுநகர் மாவட்டத்துக்கு அந்த லாரி புறப்பட்டுள்ளது. வரும் வழியில் கடலை மூட்டைகளுக்கு மத்தியில் கஞ்சா கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில், காவல் கண்காணிப் பாளர் சுரேஷ் தலைமையில் ஆய்வாளர் கருப்பசாமி ஆகியோர் கொண்ட குழுவினர் லாரியின் இருப்பிடம் குறித்து விசாரித்தனர். அதில், சித்தூர் மாவட்டம் வழியாக வேலூர் நோக்கி லாரி வந்து கொண்டிருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் தலைமையிலான குழுவினர் நேற்று காலை காத்திருந்து லாரியை மடக்கிப் பிடித்தனர். பின்னர், லாரியில் மூட்டைகளுக்கு நடுவில் பதுக்கி வைத்திருந்த 181 பார்சலில் இருந்து சுமார் 360 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (36), பாண்டியன் (40), செல்வம் (40) ஆகியோரை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகம் என கூறப்படுகிறது. இந்த பார்சல் எந்த ஊருக்கு யாருக்காக கடத்திச் செல்லப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT