கடலூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு வீட்டுக்காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி நேற்று நடைபெற்றது.
கடலூர் வேளாண் இணைஇயக்குநர் தி.சு.பாலசுப்பிர மணியன் தலைமை தாங்கி பேசுகையில், "பெரும்தொற்று காலத்தில் சத்தான காய்கறிகளை உண்பதற்கும் பொது மக்கள் அவரவர் வீடுகளில் வசதிகேற்ப மாடித்தோட்டம் அல்லது வீட்டுக்காய்கறி தோட்டத்தை அமைப்பது நல்ல பயனை தரும்" என்றார். கடலூர் வேளாண் உதவி இயக்குநர் சு.பூவராகன் இல்லங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை சாகுபடி செய்யும் முறைகள் குறித்து விளக்கினார்.
கடலூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் சிவக்குமரன் பேசுகையில், தோட்டக்கலை துறை மூலம் மாடித்தோட்டம் அமைப்பதற்கான விதைகள் மற்றும் இடுபொருட்கள் கடந்த ஆண்டுகளில் பயனாளிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். இதில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு காய்கறி வளர்ப்பு குறித்த விளக்க கையேடு வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் ஜெய, உதவி வேளாண் அலுவலர் பிரபாகரன், தோட்டக் கலை உதவி அலுவலர்கள் பழனிச்சாமி, பிரேம்குமார், வெங்கடேசன், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜவேல்ஆகியோர் செய்திருந்தனர்.