திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் உள்ள வாகைகுளத்தில் செயல்படும் பித்தளை, வெண்கலப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பூம்புகார் நிறுவனத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்தார்.
அம்பாசமுத்திரத்தில் இயற்கை முறையில் வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்றார். மண்வள மேலாண்மை குறித்த தொழில் நுட்பக் கையேடு வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாகைகுளத்திலுள்ள பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பூம்புகார் நிறுவனத்தையும், காருகுறிச்சி மண்பாண்ட தொழிலாளர் சங்கத் தையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:
வாகைகுளம் பகுதியில் பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பூம்புகார் நிறுவனம் 1963-ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் குத்துவிளக்கு, இஸ்திரிப்பெட்டி, கோயில் பூஜைமணி மற்றும் கோயில் களுக்கு தேவையான அனைத்து தளவாடப் பொருட்களும் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உட்பட திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து கதர், கைத்தறி கடைகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தை மேலும் மேம்படுத்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. காருகுறிச்சியில் மண்பாண்ட உற்பத்தியை பெருக்கிட, தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்பாடு செய்வதற்காக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டி, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெற்றிச்செல்வி, சேரன்மகாதேவி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.