திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு அறிக்கை:
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணியாற்றும் 2,814 உலமாக்களுக்கு புதிய இருசக்கர வாகனங்கள் வாங்க, ஒரு நபருக்கு ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம், இதில் எது குறைந்ததோ அத்தொகையை வழங்கஒப்புதல் அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. பயனாளிகளை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற மனுதாரர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வருமானச் சான்றிதழ், புகைப்படம், மாற்றுத் திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, சாதிச் சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வித்தகுதி சான்றிதழ் (குறைந்தபட்சம் 8-வது தேர்ச்சி அல்லது தோல்வி), வங்கி கணக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி குறியீடுடன் கூடிய வங்கி கணக்கு எண் புத்தகத்தின் முதல் பக்க நகல், சம்பந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்பிக்கவேண்டும். வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி ஆகியவற்றுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட் டுள்ளது.