கிட்டி குமாரமங்கலம் 
FrontPg

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் - பி.ஆர். குமாரமங்கலத்தின் மனைவி கொலை : சலவைத் தொழிலாளி கைது; தலைமறைவான மேலும் இருவருக்கு வலை

செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பி.ஆர். குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி (67), நேற்று முன்தினம் இரவு தமது வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அவரது வீட்டின் சலவைத் தொழிலாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவான 2 பேரை தேடிவருகின்றனர்.

இதுகுறித்து டெல்லி காவல் துணை ஆணையர் (தென்மேற்கு) இன்கீத் பிரதாப் சிங் கூறியதாவது:

தெற்கு டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கிட்டி குமாரமங்கலம் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் அவரது வீட்டின் அழைப்பு மணி ஒலித்துள்ளது. இதையடுத்து, அவரது வீட்டுப் பணிப்பெண் கதவை திறந்துள்ளார். அப்போது கிட்டி வீட்டில் சலவைத் தொழிலாளியாக வேலை செய்து வரும் ராஜு (24) என்பவர் தனது நண்பர்கள் இருவருடன் அங்கு வந்திருக்கிறார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் பணிப்பெண்ணை தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்த அவர்கள், அவரை ஒரு அறைக்கு கொண்டுசென்று கட்டிப் போட்டுள்ளனர். பின்னர், அங்கு வந்த கிட்டியைகடுமையாக தாக்கிய அவர்கள்,அவரது முகத்தை தலையணையால் அழுத்தியுள்ளனர். இதில்மூச்சுத்திணறி கிட்டி உயிரிழந்திருக்கிறார். அதன் பிறகு, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டில் இரவு வெகுநேரமாகியும் கதவு மூடப்படாமலும், விளக்குகள் எரிந்தபடியும் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு கிட்டி உயிரிழந்திருப்பதைக் கண்டுஅதிர்ச்சியடைந்த அவர்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீஸார் நடத்திய தீவிர தேடுதல்வேட்டையின் பலனாக, அதிகாலைக்குள்ளாக முக்கிய குற்றவாளி ராஜு கைது செய்யப்பட்டிருக்கிறார். தலைமறைவாகியுள்ள அவரது நண்பர்கள் இருவரை தேடி வருகிறோம். எதற்காக கொலைநடந்ததது; எவ்வளவு பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டன என்பது பற்றி விசாரித்தப்பின் தெரியவரும். இவ்வாறு கூறினார்.

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரான பி. ரங்கராஜன் குமாரமங்கலம், காங்கிரஸ் கட்சியில் பெரும் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தார். இளம்வயது முதலே அக்கட்சியில் இணைந்து பணியாற்றிய காரணத்தால், முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி மற்றும் ராஜீவ் காந்திக்கு மிகவும் நெருக்கமானவராக மாறினார். 1984-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் நின்று அவர் வெற்றி பெற்றார். பின்னர், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் அமைச்சரைவயில் சட்டத்துறை இணையமைச்சராக 1991 முதல் 1993-ம் ஆண்டு வரை அவர் பணியாற்றினார்.

இந்நிலையில், நரசிம்மராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மத்திய அமைச்சர் பதவியைஅவர் ராஜினாமா செய்தார். பிறகு,திவாரி காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார். இதையடுத்து, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 1998-ம் ஆண்டு மத்தியில் அமைந்த பாஜக ஆட்சியில், பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மின்சாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த சூழலில், புற்றுநோய் காரணமாக அவர் 2000-ம் ஆண்டு உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT