Regional02

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் - கண்கள், சிறுநீரகம், தோல் தானம் :

செய்திப்பிரிவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த வரின் சிறுநீரகம், கண்கள், தோல் ஆகியவை தானமாக வழங்கப் பட்டன.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (53). அரசு போக்குவரத்துக் கழகத்தில் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஜெயமணி. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 1-ம் தேதி சென்னிமலை அருகே நடந்த விபத்தில் மூளைச்சாவு அடைந்த பழனிசாமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதாவது:

கடந்த 1-ம் தேதி மூளைச்சாவு அடைந்த பழனிசாமியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க கோவை தனியார் மருத்துவமனையில் இருந்து, சேலம் அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டனர்.கோவை மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை தொடர்வதால், அங்கு உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்ய முடியாததால் இங்கு தொடர்பு கொண்டனர்.சேலம் அரசு மருத்துவ மனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்ததால், உடல் தான அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 4-ம் தேதி நள்ளிரவு 1.45 மணிக்கு பழனிசாமியின் உடல் கொண்டு வரப்பட்டது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் மருத்துவர் பெரியசாமி, மயக்கவியல் மருந்துத்துறை தலைவர் சிவகுமார், சிறுநீரக மருத்துவத் துறை தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இரு சிறுநீரகம், கண்கள், தோல்களை எடுத்தனர்.

இவற்றில் தலா ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனை நோயாளிக்கும், கோவை தனியார் மருத்துவமனை நோயாளிக்கும் வழங்கப்பட்டது. கண்கள் கோவை தனியார் கண் மருத்துவமனைக்கும், தோல் கோவை தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை சேலம் அரசு மருத்துவமனையில் 4-வது முறையாக மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT