2 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடன் இணைந்த மனைவி மற்றும் குழந்தைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் கேக் ஊட்டி மகிழ்ந்த ஒடிஸாவைச் சேர்ந்த உசோகொய். 
Regional02

திருச்செந்தூரில் சுற்றித்திரிந்த போது மீட்கப்பட்ட - ஒடிஸா பெண் மற்றும் குழந்தைகள் 2 ஆண்டுக்குப்பின் கணவருடன் சேர்த்து வைப்பு :

செய்திப்பிரிவு

திருச்செந்தூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தையுடன் மீட்கப்பட்ட ஒடிஸாவைச் சேர்ந்த பெண் நேற்று கணவருடன் சேர்த்து வைக்கப்பட்டார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செந்தூரில் குழந்தையுடன் தனியாக சுற்றித்திரிந்த பிளாச்சி என்ற கர்ப்பிணி பெண், சமூக நலத்துறை மூலம் மீட்கப்பட்டார். முடுக்குமீட்டான்பட்டியில் உள்ள ஆக்டிவ் மைண்ட்ஸ் பெண்கள் காப்பகத்தில் அவர் தங்க வைக்கப்பட்டார். அவருடைய பெண் குழந்தை அடைக்கலபுரம் செயின்ட் ஜோசப் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டாள். பிளாச்சிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் பிளாச்சிக்கு, மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டன. இதன்மூலம் சுய நினைவு திரும்பிய அவர் தன்னைப் பற்றிய விவரங்களைத் தெரிவித்தார். அவரது கணவர் உசோகொய் என்பதும், அவர் ஒடிஸா மாநிலம் போலாங்கி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஒடிஸா மாநில காவல் துறை உதவியுடன் அவர் கண்டறியப்பட்டார்.

ஒடிஸா காவல் துறையினர் நேற்று பிளாச்சியின் கணவரை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம், பிளாச்சி மற்றும் குழந்தைகளை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஒப்படைத்தார். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டப்பட்டது. ஒருங்கிணைந்த சேவை மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாடைகளை குழந்தைகளுக்கு ஆட்சியர் வழங்கினார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்டி.நேரு, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின்ஜார்ஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT