நீலகிரி மாவட்டத்தில், ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி வழங்குவது தொடர்பாக, கூட்டுறவுத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாநில உணவு ஆணையத்தின் தலைவர் ஆர்.வாசுகி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழக அரசு அறிவித்துள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு விவரம் குறித்தும், இரண்டு தவணையாக தலா ரூ.2,000 வழங்கியது குறித்தும், பழங்குடியின மக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்ட விவரங்கள் குறித்தும் மாநில உணவு ஆணையத்தின் தலைவர் ஆய்வு செய்தார். அதன் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு உணவுப் பொருட்கள் முறையாக கிடைக்கிறதா, ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், அனைத்து மக்களுக்கும் உணவுப் பொருட்கள் சென்றுசேர வேண்டும். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் என எவரும் விடுபடாமல் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடும்பத்தலைவரே வந்து உணவுப் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வந்து அத்தியாவசியப் பொருட்களை பெற்றுச் செல்லலாம். இங்குள்ள மக்களின் தேவைக்கேற்ப, நீலகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் மண்ணெண்ணெய் அளவை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.