விலை உயர்வைக் கட்டுப்படுத்த பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: கரோனாபரவல் நேரத்தில் காமராஜர் பிறந்த நாளினை கரோனா விழிப்புணர்வு நாளாக கட்சியினர் கடைப்பிடிப்போம்.
அதன் பின்னர் களத்தில் இறங்கி ஆட்சியாளர்களின் நிறை, குறைகளை மக்களிடம் தெரியப்படுத்துவோம்.
தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும் கிளை ஆறுகளில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவது தமிழகத்தின் நீராதாரத்தினை பாதிக்கும்.
தமிழகத்தின் நீர் உரிமையை நீர் மேலாண்மை வாரியம் பாதுகாக்க வேண்டும். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் தனது மதிப்புக்கூட்டு வரியை குறைத்தால் பெட்ரோல், டீசலின் விலை குறையும் வாய்ப்பு உள்ளது.
கரோனா காலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் மக்கள் பாதிக்கப்படுவார்களா என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். கரோனா இறப்பு சான்றிதழ் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மின்தடை இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு.
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை அரசியல்வாதிகள் குழப்பக் கூடாது. உச்சநீதிமன்றத்தின் முடிவினை ஏற்று செயல்படுத்த வேண்டும். கல்வியில் அரசியல் கலக்கக் கூடாது.
கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த போதே தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என்பது மக்கள் உணர்ந்திருப்பார்கள் என்று தெரிவித்தார்.
முன்னாள் எம்பி, பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், தமாகா மாவட்டத் தலைவர் ஆர்.ஞானச்சந்திரன், அ.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.