திருச்செந்தூர் - கன்னியாகுமரி இடையே புதிய நான்குவழி தேசியநெடுஞ்சாலை (என்எச் 32) அமைப்பது தொடர்பாக, அதிகாரிகளுடன் தூத்துக்குடி ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
புதிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான வழித்தடங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நாகப்பட்டிணம் முதல் கன்னியாகுமரி வரை திருச்செந்தூர் வழியாக புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு சாலை மார்க்கமாக செல்லும்போது 58 கிமீ வரை பயணதொலைவு குறைவதுடன், பயணநேரமும் மிச்சமாகும். ஏற்கெனவே,கிழக்கு கடற்கரை சாலையில்இருவழிச்சாலை உள்ளது. அது நான்குவழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட உள்ளது என்றார் ஆட்சியர். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், தேசிய நெடுஞ்சாலைதூத்துக்குடி திட்ட இயக்குநர் சங்கர், கோட்டாட்சியர் கோகிலா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.