திருவண்ணாமலை அடுத்த மேல்கச்சிராப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம். 
Regional01

உருமாறிய கரோனாவை எதிர்க்க 2 தவணை தடுப்பூசி அவசியம் : நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுரை

செய்திப்பிரிவு

இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டால்தான் உருமாறிய கரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியானது முழுமை யாக செயல்படும் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுசுகாதார துறை சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் தி.மலை அடுத்த மேல் கச்சிராப்பட்டு கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. ஒன்றிய குழுத் தலைவர் கலைவாணி தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அமிர்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டாம்பூண்டி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி வரவேற் றார். பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் மருத்துவர் செல்வ விநாயகம் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மூலம் கரோனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது. கிராமப்புறங்களில் உள்ளாட்சி பிரதி நிதிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கரோனா தடுப்பூசியை பொதுமக்களும் ஆர்வத்துடன் செலுத்திக் கொள் கின்றனர். இதனால், கரோனாவை முற்றிலும் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் உருமாறிக்கொண்டே இருக்கும். ஒரு தவணை தடுப்பூசி மட்டும் வைரசுக்கு எதிராக செயல்படாது. 2-வது தவணை தடுப்பூசியும் கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் உருமாறிய கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியானது முழுமையாக செயல்படும்” என்றார்.

இதில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் குருநாதன், சுகாதாரத் துறை துணை இயக்குநர் அஜிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT