பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று மாலை விசாரணையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் கேத்தனூரை சேர்ந்தவர் ராஜாமணி. இவர், வீட்டுடன் கூடிய இடத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். தற்போது புதிதாக வீடு கட்ட நினைத்து, பட்டா மாறுதல் செய்ய முயற்சித்துள்ளார். இதுதொடர்பாக, பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் மேகநாதன் என்பவரை கடந்த 2-ம் தேதி அணுகியுள்ளார். பட்டா மாறுதலுக்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜாமணி, மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ராஜாமணி மூலமாக நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீஸார் மேகநாதனிடம் அளிக்க வைத்தனர். அதன்படி, அவர் அளிக்கும்போது கையும், களவுமாக மேகநாதனை பிடித்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று இரவு வரை விசாரணையில் ஈடுபட்டனர்.